கள்ளிமலர்

A tale of a cactus flower..

Sunday, May 30, 2010

என்தமிழே! உன்னை காப்பேன்


கல்தோன்றி  மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடியாம் நம்  தமிழ்க்குடியின் இணைப்புச்சங்கிலி, தரணியெங்கும் சிறப்பு பெற்ற நம் தமிழ் மொழியென்றால் மிகையாகாது. இத்தகைய சிறப்புடைய நம் மொழியை நாம் எவ்வாறு காத்து வருகிறோம் என்றால் கசப்பான பதில்தான் கிடைக்கும். மின்சாரம் கண்டிராத தமிழ்க் கிராமத்திலிருந்து மேலைநாட்டில் குடியேறிய சில தமிழ்நண்பர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஆங்கிலத்தைமட்டுமே வீட்டில் கற்றுத்தருவதோடு, யாராவது தமிழில் தங்கள் குழந்தைகளோடு பேசும்போது மிகுந்த கோபமும் கொள்கிறார்கள். நான் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வேண்டுமென்றே அந்த தமிழ்க் குழந்தைகளிடம் தமிழிலேயே பேசிவருகிறேன்.

தமிழ் நமது கண்களென்றால, மற்ற மொழிகள் கண்ணாடி போன்றவைகள் மட்டுமே. உங்கள் குழந்தைகளின் கண்களை மூடி விட்டு கண்ணாடி போட்டு என்ன செய்யப்போகிறீர்கள்?  சிந்தியுங்கள் தமிழ் அன்பர்களே! இல்லை விரைவில் நாம் அடையாளம் இழந்துவிடுவோம்.

அடுத்து சென்னைதமிழ்:  தமிழை வட்டார வழக்கில் பேசுவதில் தவறே இல்லை. அதற்காக அர்த்தமே இல்லாத வார்த்தைகளை சேர்த்துப் பேசுவது ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். தயவுசெய்து முடிந்தவரை நல்ல தமிழில் பேசுங்கள். 

தமிழ் என்ற ஒற்றைச்சொல்லில்  இணைந்து, தரணியெங்கும் தமிழ்ப்புகழ் பாடி, தமிழுக்காக களம் செல்லும் படையணியில் முன்வரிசையில் செல்லத்துடிக்கும் உடன்பிறப்புகளுக்கும், இதுவரை நம் தமிழுக்காக தம் இன்னுயிரையும்  நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கும் இந்தக் கவிதையை சமர்ப்பிக்கிறேன்.

என்தமிழே! உன்னை காப்பேன்

தரணியிலே கால்பதித்தேன்,
தமிழ்மறத்தி பால்குடித்தேன்.
தாய்ப்பாலை கொடுத்தவள்
தமிழ்ப்பாலை அதிகம் கொடுக்க,
உதிரத்தில்கலந்தது தாய்ப்பால்
உயிர்தனில்கலந்ததோ தமிழ்ப்பால்.

திரைகடல்ஓடி திரவியம் தேடிட
தீர்மானித்தேன், புறப்பட்டேன்.
உறவுகள், உடமைகள் பிரிந்தேன்
உலகமெங்கும் சுற்றித்திரிந்தேன்
காணாதவைகளெல்லாம் கண்டேன்...
காணவில்லை தமிழ்போல் எங்கும்.

சென்ற இடமெல்லாம் தமிழின்
சிறப்புகள் கண்டு மகிழ்ந்து, முடிவில்
சென்னை மாநகர் வந்தேன் - அங்கு
அன்னைத்தமிழின் நிலை கண்டேன்
அதிர்ச்சியடைந்தேன், பதறினேன்,
அன்றே  ஓர் சபதம் எடுத்தேன்.

ஆழிக்கடல் அலை எழுந்து
ஆகாயம் தொடுமளவு உயர்ந்து
கொடும்புயல் வேகத்தில் சீறி
குவலயம் நோக்கிப்பாய்ந்து
நீரில் உலகமே அழிந்தாலும் - தமிழை
நீர்புகா பேழையில் காத்திடுவேன்.

வெடித்துச்சிதறி  வின்முட்டி
வெந்தணலாய் கீழ் வீழ்ந்த
எரிமலைக்குழம்பில் பூமி
எரிந்து கருகிப்போனாலும்
கோள்களெங்கும்  தமிழே - உனை
கொண்டு சேர்ப்பேன், காத்திடுவேன்

செங்குருதி முழுதும் இழந்தாலும்
செந்தமிழை காத்திடுவேன்.
எமனருகே வந்து நின்றாலும்
என்னுயிரைத் தரும்படி கேட்டாலும்
இறுதிவரை களம் நிற்பேன்,
என்தமிழே! உன்னை காப்பேன்.

அன்புடன்
பாலா வானுமாமலை

Friday, May 28, 2010

மண்பிரிந்து வின்செல்லும் மாதாவின் மாதாவே,

2001 ல் நான் சவுதி அரேபியாவில் வேலைபார்த்த போது, ஒருநாள் பாலைவனத்தில் வழக்கம்போல் வேலையை துவங்கியபோது ஒரு தொலைப்பேசி அழைப்பு வர, மறுமுனையில் தமிழகத்திலிருந்து பேசிய உறவினர் என் தாயாரின் தாயார் (எங்கள் பாசத்திற்குரிய ஆச்சி) மறைந்து விட்டார்கள் எனக்கூறி வைத்துவிட்டார். யாருமே இல்லாத பாலைவத்தில் தனியாளாக இருந்த எனக்கு ஒன்றும் ஓடவில்லை.  ஏனென்றால் எங்கள் ஆச்சியின் மீது நாங்கள் எல்லோரும் அளவுகடந்த அன்பு வைத்திருந்தோம். பேரக்குழந்தைகளானஎங்கள் மீது அவர் உயிரையே வைத்திருந்தார்.

இடிபோல் வந்த செய்தி கேட்டு என்மனம் தவியாய் தவித்தது. நினைவலைகள் பின்னோக்கிச்சென்றன. ஆச்சி எனை  பாசத்தோடு  வளர்த்த  ஒவ்வொரு  காட்சியும்  கண்முன்னே தோன்ற, கைகள் நடுங்கிட, கண்கள் கலங்கிட அன்று நான் எழுதிய  இந்தக்கவிதையை பெற்றோர்களைப் பேணிக்காக்கும் (முதியோர் இல்லத்தில் விடாமல்) பிள்ளைகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.  

மண்பிரிந்து வின்செல்லும் மாதாவின் மாதாவே!

மண்பிரிந்து வின்செல்லும் மாதாவின் மாதாவே!
உன்பிரிவால் வாடுகிறேன், அறிவாயோ தாயே?
வியர்வையை நான் தினம் சிந்திய அரபுநாட்டு மண்ணில்
விழிநீரை சிந்தவிட்டு கலங்குவதை காண்பாயோ?

சொல்லிய அழ யாருமில்லா பாலைவனத்தில், உன்
செல்வமதை தனியாக தவிக்கவிட்டுப் போனாயே.
வேலைசெய்ய மனமின்றி வேதனையில் நான் தவிக்க - அந்த
பாலைவனம் குளிர்ந்ததம்மா எந்தன் விழி நீர் தெறிக்க

உன் முகம் கண்டு கதறியழ ஆவல்கொண்டேன், அது
முடியாமல் மணல்தரையில் அமர்ந்துகொண்டேன்
அடக்கித்தான் பார்த்தேன் கண்ணீரை, முடியவில்லை
அந்த நன்றியுள்ள கண்களுக்கு அவ்வளவு சக்தியில்லை

துரும்பு எந்தன் மீதுவிழ துடிதுடித்துப் போவாயே, இன்று
இரும்புக்குளாய்களோடு எனை புலம்பவிட்டுப் போனாயே.
பார்த்து பார்த்து எனை வளர்த்த பாசமிகு அன்னையே - உனை
பார்ப்பதென்றால் இனி எங்கு வர வேண்டுமம்மா தாயே?

கள்ளிகுளம், காடுவெட்டி போகும்போது, உந்தன்
கைப்பிடித்து அழைத்துப்போனது நினைவில் உண்டு
சிறுதொலைவு போவதற்கு துணை வந்த நான் - நீ
பெருந்தொலைவு போவதற்கு சம்மதிப்பேனோ?

வெள்ளையுள்ளம் கொண்டவளே, வெள்ளையம்மாளே! - என்
உள்ளமெல்லாம் நீ நிறைந்திருக்க, பிரிவொன்று உண்டோ?
என்னதவம் செய்தேனோ தாயே, உந்தன் மகள்வழி நான்பிறக்க
என்னுடைய மகளாக பிறந்துவிடு நீயே, நான் உனை வளர்க்க.

என்றும் பாசத்துடன், உங்கள் உயிர்
பாலா வானுமாமலை

இளைஞனே எழுந்திரு! இமைதிற, விழித்திரு!

மக்களாட்சியின் மாண்பு என்பது,  யார் வேண்டுமென்றாலும்  தேர்தலில் நின்று வெற்றிபெற்று மக்களுக்கு தொண்டு செய்ய உருவாக்கப்பட்டதே.  இன்றைய சூழ்நிலையில் தேர்தலில் போட்டியிடுபவர்களின் கண்ணியத்தை உலகறியும். நல்லவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது, அப்படியே போட்டியிட்டாலும் அவர்கள் ஓட்டை கூட அவர்களால் போட முடியாது. காலையிலே கட்சிகாரர்கள் போட்டுவிடுவார்கள்.

 ஒரு கட்சி வெற்றிபெறும்போது, அந்தக்கட்சியின் தலைமை அறிவிக்கும் முன்னே நாமே  கூறிவிடலாம் யார் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கப்போகிறது என்று. புதிதாக வெகு சிலரே அமைச்சராக முடியும். காரணம் மக்களாட்சி தத்துவத்தை எந்தக்கட்சியும் கடைபிடிக்காததுதான். இவர்கள் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் அமைச்சராகி மக்களுக்கு என்ன செய்யபோகிறார்கள் என்றால், பதில் நமக்கே தெரியும் நன்றாக. "கொள்ளையடிக்கப் போகிறார்கள் நம்மை".

எவ்வளவுதான் அவர்கள் நம்மை கொள்ளையடித்தாலும் பின்னும் நாம் அவர்களைத்தான் தேர்ந்தெடுத்து அமைச்சர்களாக்கி அழகு பார்ப்போம். ஏனென்றால் ஆளும் நேரத்திலும், தேர்தல் நேரத்திலும் அவர்கள் கொடுக்கும் இலவசங்கள். அது போன்ற இலவசங்களில் மெய் மறந்து, சீர் கெட்டுப்போய் உள்ள இந்த தமிழ்சமுதாயத்தை எந்த ஆண்டவனாலும் திருத்த முடியாது என்று கூறி ஒதுங்குவதை விட்டு விட்டு, நம்முடைய இளைஞர்கள் மேல் நம்பிக்கை வைப்போம். ஒருநாள் அவர்கள் இந்த தமிழ்சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்வார்கள் என்று நம்பி நான் எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

இளைஞனே எழுந்திரு! இமைதிற, விழித்திரு!

இளைஞனே எழுந்திரு! இமைதிற, விழித்திரு!
இணைந்திடு ஓரணி,  இணையில்லா தமிழ் அணி.
பிரிவினை தவிர்த்திடு, பிரியமாய் ஒன்று சேர்
பிரளயம் நடுங்கிட, திரண்டிடு, புரட்சிசெய்!.

கேளிக்கை மயக்கத்தில், கெட்டு நீ போகாதே
சோம்பலைத் தழுவி, சுணக்கம் நீ கொள்ளாதே!
ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடிக்கும் கும்பல்
ஓட்டுக்கு கொடுக்கும் இலவசத்தில் மயங்கிவிடாதே!

இலவசம் என்று ஆள்வோர் தருவதெல்லாம்
இனிமை என்று, எண்ணி மகிழ்ந்திடாதே! - நீ
புரட்சிசெய்து விடுவாயோ என்று அஞ்சி, ஆளும்
புல்லையர் உனக்கிட்ட இரும்புச்சங்கிலிதான் அது.

இலவசம் என்றும் இனிப்பு விஷமடா, அதை
இல்லாதாக்கிடும் உழைப்பே மருந்தடா
உழைப்பெனும் மருந்து உன்னிடம் உண்டடா, அதை
உபயோகப்படுத்தினால், வெற்றி உனதடா

உன்னைச்சுரண்டி, சிறிது உனக்கே கொடுப்பதை
கண்ணைமூடி வாங்கிவிடாதே! கண்ணியசீலனே!
மண்ணை ஆளும் தீய சக்திகளை ஒடுக்கிடு
மக்களாட்சியை அரியணையில் அமர்த்தி விடு.

எரிமலையாய் வெடித்து, இரும்புச்சங்கிலி உடைத்து,
வரிப்புலியாய் களம் இறங்கு, வாழிய தமிழென முழங்கு.
கொள்ளையர் ஆட்சியின் குரல்வளை நெரித்திடு
நல்லதோர் மக்களாட்சி  மலர்ந்திடச்செய்திடு

அன்புடன்
பாலா வானுமாமலை

Sunday, May 23, 2010

என்று காண்பேன் இனி?


















வாழ்கையின் பல பரிமாணங்களை கண்ட பின்னும், இன்ப துன்பங்களின் எல்லைகளை தொட்ட பின்னும், மனதின் ஒரு ஓரத்தில் இன்னும் அந்த சிறு வயதின் ஆனந்த காட்சிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.. அவைகளில் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

என்று காண்பேன் இனி?

கொல்லம் ஓடு போட்ட வீடு
குளக்கரையில் அமைந்த வீடு
நல்லதொரு நாள்தனிலே
நான் வந்து பிறந்த வீடு 
என்று காண்பேன் உனை - நான்
என்று காண்பேன் இனி?

வட்ட கல் வெட்டான் குழி
வழுக்கி நான் விழுந்த குழி 
விட்டு என்றும் பிரியாத 
வெங்காயத் தாமரையே! 
என்று காண்பேன் உனை - நான்
என்று காண்பேன் இனி?

ஓங்கி உயர்ந்த பனை  
ஓலை முடி கொண்ட பனை  
ஊரணியின் ஓரத்தில் 
ஓரணியாய் நின்ற பனை
என்று காண்பேன் உனை - நான்
என்று காண்பேன் இனி?

நீச்சல் படித்த குளம்
நீர்க்கோழி பிடித்த குளம்
கோடை விடுமுறையில்
ஓடி விளையாண்ட குளம்
என்று காண்பேன் உனை - நான்
என்று காண்பேன் இனி? 

கல்லில் வடித்த சிலை
காதுடைந்த நாய் சிலை
குளக்கரை சாஸ்தாவின்
குதிரையாய் நின்ற சிலை
என்று காண்பேன் உனை - நான்
என்று காண்பேன் இனி? 

வேட்டைக்கு போன காடு
வெள்ளை முயல் பிடித்த காடு
பலநாள் நான் திரிந்த
தளவாய் தேவர் காடு
என்று காண்பேன் உனை - நான்
என்று காண்பேன் இனி? 

அரசு துவக்கப்பள்ளி
ஆத்திச்சூடி படித்த பள்ளி
அன்னைத்தமிழ் மொழியை
ஆர்வமாய் கற்ற பள்ளி
என்று காண்பேன் உனை - நான்
என்று காண்பேன் இனி?

மனம் நிறைய நினைவலைகள்
மலரும் நல் நினைவுகள்
தினம் எழுதி தீர்த்தாலும்  
தீர்ந்திடுமோ  ஆதங்கம்?
எண்ணமெல்லாம் நிறைந்தவற்றை
என்று காண்பேன் இனி?

அன்புடன்
பாலா வானுமாமலை

Saturday, May 22, 2010

சாதீய அணிகளை ஒழிப்போம்


சாதீய அணிகளாய் பிரிந்துகிடக்கும் நம் தமிழ் சமுதாயத்தை எண்ணி, மனம் கலங்கி எழுத்தாய் வடித்தது..

சாதீய அணிகளை ஒழிப்போம்

குமரிக்கண்டத்தில் பிறந்த இனமாம்
குவலயத்தில் சிறந்த இனமாம்
ஓசை மொழிகள் உள்ள உலகில்
உயிருள்ள தமிழை கொண்ட இனமாம்

மண்ணுக்கும் பொன்னுக்கும் போரிட்டு
மரணத்தை காணும் மானிடர் கூட்டத்தில்
அன்னையாம் தமிழுக்கு தன்னையே தந்த
மொழிப்போர் தியாகிகள் நிறைந்த இனமாம்

தோற்றான் என்றொரு வார்த்தை அறியா
தோரணையுடனே வாழ்ந்த இனமாம்
மாற்றான் படைகளுக்கு மரணத்தை காட்டிய
மாவீரர் பலரை தந்திட்ட  இனமாம்

தரணியில் மானம் என்ற சொல்லுக்கு
தனியொரு இலக்கணம் தந்த இனமாம்
கற்புக்கும், நட்புக்கும் காவியம் பல தந்த
அற்புத சீலர்கள் பிறந்த இனமாம்

இத்துனை சிறப்புடைய என்தமிழ் இனமின்று
செத்துகொண்டிருக்க காரணம் ஒன்றே
ஓரினம், ஓரணி என்பதை மறந்து
சாதிக்கு ஓரணி வைத்ததே காரணம்.

சாதீய அணிகளை ஒழிப்போம் இன்றே
சாதிக்கும் அணியாய்  திரள்வோம் நன்றே
முன்னோர் வடம்பிடித்த முத்தமிழ் தேரை
முன்னைவிடவும் சிறப்பிப்போம் ஒன்றாய்

அன்புடன்
பாலா வானுமாமலை

Wednesday, May 19, 2010

நேதாஜியே! பிறந்துவிடு மீண்டும்..

























தமிழீழ தேசிய தலைவரின் மனம் கவர்ந்த மாவீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களை நினைத்து எழுதியது..

நேதாஜியே! பிறந்துவிடு மீண்டும்..


வங்கத்தில் பிறந்த சிங்கமே!
வான்புகழ் கொண்ட தங்கமே!
தென்திசை மறத்தமிழர் வீரத்தை
திக்கெட்டும் போற்றிடச் செய்தோனே!

பாரதத்தாயின் புகழுக்கு -அன்று
பறங்கியர் கூட்டத்தால் களங்கம் வர
ஆயுதம் தாங்கிய அணியொன்று அமைத்து
பாயும் புலிபோல் பாய்ந்தவனே!

கடற்கரையில் உப்பு காய்ச்சி
கம்படி வாங்கி கண்ணீர்விட்ட
கயவர் கூட்டம் விட்டு பிரிந்து - வீர
கம்பீர படையொன்று அமைத்தவனே!

வெள்ளையர் என்னும் விடமிகு
புல்லையர் கூட்டத்தை அழித்திட
நெஞ்சம் நிமிர்த்தி போரிட்ட -எங்கள்
நேதாஜியே! வீரத்தளபதியே!

சிங்கம் நீ இல்லாத தேசத்தில்
சில சிறுநரிகள் ஆடியது ஐம்பதாண்டு.
இறுதியில் அந்த பாதகர் கை வீழ்ந்து,
ஒருநாள் வெற்றித்தாமரை மலர்ந்தது.

அந்தோ பரிதாபம்! இன்னும் அந்த
அடிமைக்கூட்டம் திருந்தவில்லை
பறித்து வீசியது வெற்றித்தாமரையை
பதவியில் ஏற்றியது வெள்ளைக்காரியை

அடிமைக்கூட்டத்தின் ஆட்டம் அடக்கிட,
வெள்ளை தலைமையின் வேரை அறுத்திட,
வேந்தனே! வீரமிகு வேங்கையே! -நீ
வந்துவிட வேண்டும். பிறந்துவிடு மீண்டும்.

அன்புடன்
பாலா வானுமாமலை

Tuesday, May 18, 2010

புறப்படு ஈழம் புறப்படு

ஈழத்தில் வாடும் நமது இரத்த சொந்தங்களுக்காக, திருசெந்தூர் முருகனிடம் முறையிட்டு எழுதியது...

புறப்படு ஈழம் புறப்படு

புறப்படு ஈழம் புறப்படு
பொறுப்பதேன் முருகா புறப்படு

தமிழ் வளர்க்க வேண்டுமென்று
சங்கம் வைத்த இறைவா
தமிழரை நீ ஈழத்தில்
தவிக்கவிடுவது முறையா
ஆண்டியான போதும் உனக்கு
ஆறு வீடு உண்டு
ஆயிரங்கள் இருந்தும் தமிழன்
அகதியானான் இன்று
சேனையை திரட்டி சூரனை அழித்த
செந்தில் ஆண்டவா
தமிழ் மட்டும் உனக்கு வேண்டும்
தமிழன் வேண்டாமா (பாடலில் இருமுறை)

புறப்படு ஈழம் புறப்படு
பொருப்பதேன் முருகா புறப்படு


அன்புடன்
பாலா வானுமாமலை

Monday, May 17, 2010

பணமென்னும் தீபத்தின் ஒளிநோக்கி



















பணத்தின் பின்னே ஓடும் நண்பர்களுக்கு எழுதியது...

பணமென்னும் தீபத்தின் ஒளிநோக்கி...

பணமென்னும் தீபத்தின் ஒளிநோக்கி
பாயும் மானிட பூச்சிகளே
மனமதில் கருணை இல்லையெனில்
மாய்ந்து போவீர் ஞாபகம்

ஓட்டம் நிறுத்தி ஓரிடம் அமர்ந்து
ஒருகணம் செய்வீர் சிந்தனை
ஆட்டம் முடிந்து போனபின்னே
ஆவிக்குநேரும் நிலைதன்னை

அடுத்தவருக்கு கெடுதல் செய்து
அளவில்லாமல் சேர்த்து வைத்து
படைத்தவனுக்கு தெரியாதென்று
பாவகாரியம் பலவும் செய்து -நீர்

ஆடும் ஆட்டம் அனைத்திற்கும்
ஆண்டவன் தீர்ப்பு உண்டு, இதை
நன்றாய் மனதில் கொள்க - மனதில்
நாளும் கருணை கொள்க

தர்மம் தலை காக்கும், கருணை
தலைமுறை, தலைமுறை காக்கும்.
கருணை கொள்ளும் உள்ளம்
கடவுள் வாழும் இல்லம்

அன்புடன்
பாலா வானுமாமலை

இணையத்தில் வலை விரித்து


இணையத்திலேயே மூழ்கிகிடக்கும் நண்பர்களுக்காக முன்பொருநாள் நான் எழுதியது.

பணத்தை விரயம் செய்து
பாதி ரா விழித்திருந்து
இணையத்தில் வலை விரித்து
இன்புற்று நீ இருக்கும்
கண்கொள்ளா காட்சிதனை
கண்டுகொண்ட ஆத்திரத்தில்
சினம் கொண்ட உன் மனைவி
செருப்போடு ஓடிவர
அன்பான சம்சாரம்
ஆனதடா மின்சாரம்

அன்புடன்
பாலா வானுமாமலை

எங்கள் நாளை



பாலைவன பூமியான அரபு நாடுகளில் பாடுபட்டுக்கொண்டிருக்கும், எனது பாசத்திற்குரிய தோழர்களுக்கு இந்தக்கவிதையை சமர்பிக்கிறேன்.

சிங்கார கொண்டையாட்டி
சேவல் கூவும் சத்தமின்றி
கோவில் மணி ஓசையின்றி
குளத்து தண்ணீர் குளியளின்றி
உறக்கம் கலையாத விழிகளுடன்
பறக்கும் வேகத்தில் சாலையில் -நாங்கள்
பயணம் செய்யும் வேலை
பாட்டாளி எங்கள் அதிகாலை


பாலைவன கப்பலென
பாரெங்கும் பெயர்பெற்ற
ஒட்டகமே தாகத்தில்
உயிரைவிடும் தேசத்தில்
சுட்டெரிக்கும் சூரியவொளி
பட்டுசுடும் பாலைவனத்தில்
இரும்புக்குழாய்கள் இருக்குமிடம்தேடி
திரும்பத்திரும்பச்செல்வதே எங்கள் வேலை


கதிரவனின் பணிமுடிந்து
கனி நிலவு பணிதொடங்க
உலகத்து உயிர்களெல்லாம்
உறைவிடம் போனபின்பு
கடமைதனை கச்சிதமாய்
கருத்துடனே செய்து முடித்து
கவசஉடை களையும் வேலை
காரிருள் சூழ்ந்த எங்கள் மாலை


கோட்டை கட்டி வாழும் வாய்ப்பை
கோட்டை விட்டு விட்டாலும்
குடிசைகட்டி வாழ்ந்திடவாவது
குறைவில்லா வாழ்வு தர
ஆண்டவனே உன்னை வேண்டி -இந்த
அரபு மண்ணில் உழைக்கின்றோம்
உயிர் உள்ளவரை வேலை, வேலை
உழைப்பாளி எங்களுக்கு இல்லை நாளை


அன்புடன்
பாலா வானுமாமலை

என்னைப்பற்றி சில தகவல்கள்

வணக்கம் என் அன்பிற்கினிய தமிழ் நெஞ்சங்களே

என்னை பற்றிய ஒரு சிறு அறிமுகம்.
பெயர் : பாலா வானுமாமலை
பிறந்தது : பரணி பாயும் நெல்லை சீமை
வளர்ந்தது: பல நாடுகளில்.. நாடோடியாய்
தற்சமயம் வசிப்பது: வடஅமெரிக்கா
இந்த பக்கத்தை உருவாக்க காரணம்:
1) ஒரு கள்ளி மலரின் வாழ்கையை தொடர்கதையாக எழுத வேண்டுமென்பது.
2) நான் எழுதிய சில கவிதைகளை பதிவு செய்ய வேண்டுமென்பது.
3) சில பொதுவான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது

தொடரும் பயணத்தில் தொடருவோம்... வாருங்கள்