கள்ளிமலர்

A tale of a cactus flower..

Friday, May 28, 2010

மண்பிரிந்து வின்செல்லும் மாதாவின் மாதாவே,

2001 ல் நான் சவுதி அரேபியாவில் வேலைபார்த்த போது, ஒருநாள் பாலைவனத்தில் வழக்கம்போல் வேலையை துவங்கியபோது ஒரு தொலைப்பேசி அழைப்பு வர, மறுமுனையில் தமிழகத்திலிருந்து பேசிய உறவினர் என் தாயாரின் தாயார் (எங்கள் பாசத்திற்குரிய ஆச்சி) மறைந்து விட்டார்கள் எனக்கூறி வைத்துவிட்டார். யாருமே இல்லாத பாலைவத்தில் தனியாளாக இருந்த எனக்கு ஒன்றும் ஓடவில்லை.  ஏனென்றால் எங்கள் ஆச்சியின் மீது நாங்கள் எல்லோரும் அளவுகடந்த அன்பு வைத்திருந்தோம். பேரக்குழந்தைகளானஎங்கள் மீது அவர் உயிரையே வைத்திருந்தார்.

இடிபோல் வந்த செய்தி கேட்டு என்மனம் தவியாய் தவித்தது. நினைவலைகள் பின்னோக்கிச்சென்றன. ஆச்சி எனை  பாசத்தோடு  வளர்த்த  ஒவ்வொரு  காட்சியும்  கண்முன்னே தோன்ற, கைகள் நடுங்கிட, கண்கள் கலங்கிட அன்று நான் எழுதிய  இந்தக்கவிதையை பெற்றோர்களைப் பேணிக்காக்கும் (முதியோர் இல்லத்தில் விடாமல்) பிள்ளைகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.  

மண்பிரிந்து வின்செல்லும் மாதாவின் மாதாவே!

மண்பிரிந்து வின்செல்லும் மாதாவின் மாதாவே!
உன்பிரிவால் வாடுகிறேன், அறிவாயோ தாயே?
வியர்வையை நான் தினம் சிந்திய அரபுநாட்டு மண்ணில்
விழிநீரை சிந்தவிட்டு கலங்குவதை காண்பாயோ?

சொல்லிய அழ யாருமில்லா பாலைவனத்தில், உன்
செல்வமதை தனியாக தவிக்கவிட்டுப் போனாயே.
வேலைசெய்ய மனமின்றி வேதனையில் நான் தவிக்க - அந்த
பாலைவனம் குளிர்ந்ததம்மா எந்தன் விழி நீர் தெறிக்க

உன் முகம் கண்டு கதறியழ ஆவல்கொண்டேன், அது
முடியாமல் மணல்தரையில் அமர்ந்துகொண்டேன்
அடக்கித்தான் பார்த்தேன் கண்ணீரை, முடியவில்லை
அந்த நன்றியுள்ள கண்களுக்கு அவ்வளவு சக்தியில்லை

துரும்பு எந்தன் மீதுவிழ துடிதுடித்துப் போவாயே, இன்று
இரும்புக்குளாய்களோடு எனை புலம்பவிட்டுப் போனாயே.
பார்த்து பார்த்து எனை வளர்த்த பாசமிகு அன்னையே - உனை
பார்ப்பதென்றால் இனி எங்கு வர வேண்டுமம்மா தாயே?

கள்ளிகுளம், காடுவெட்டி போகும்போது, உந்தன்
கைப்பிடித்து அழைத்துப்போனது நினைவில் உண்டு
சிறுதொலைவு போவதற்கு துணை வந்த நான் - நீ
பெருந்தொலைவு போவதற்கு சம்மதிப்பேனோ?

வெள்ளையுள்ளம் கொண்டவளே, வெள்ளையம்மாளே! - என்
உள்ளமெல்லாம் நீ நிறைந்திருக்க, பிரிவொன்று உண்டோ?
என்னதவம் செய்தேனோ தாயே, உந்தன் மகள்வழி நான்பிறக்க
என்னுடைய மகளாக பிறந்துவிடு நீயே, நான் உனை வளர்க்க.

என்றும் பாசத்துடன், உங்கள் உயிர்
பாலா வானுமாமலை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home