கள்ளிமலர்

A tale of a cactus flower..

Sunday, May 30, 2010

என்தமிழே! உன்னை காப்பேன்


கல்தோன்றி  மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடியாம் நம்  தமிழ்க்குடியின் இணைப்புச்சங்கிலி, தரணியெங்கும் சிறப்பு பெற்ற நம் தமிழ் மொழியென்றால் மிகையாகாது. இத்தகைய சிறப்புடைய நம் மொழியை நாம் எவ்வாறு காத்து வருகிறோம் என்றால் கசப்பான பதில்தான் கிடைக்கும். மின்சாரம் கண்டிராத தமிழ்க் கிராமத்திலிருந்து மேலைநாட்டில் குடியேறிய சில தமிழ்நண்பர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஆங்கிலத்தைமட்டுமே வீட்டில் கற்றுத்தருவதோடு, யாராவது தமிழில் தங்கள் குழந்தைகளோடு பேசும்போது மிகுந்த கோபமும் கொள்கிறார்கள். நான் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வேண்டுமென்றே அந்த தமிழ்க் குழந்தைகளிடம் தமிழிலேயே பேசிவருகிறேன்.

தமிழ் நமது கண்களென்றால, மற்ற மொழிகள் கண்ணாடி போன்றவைகள் மட்டுமே. உங்கள் குழந்தைகளின் கண்களை மூடி விட்டு கண்ணாடி போட்டு என்ன செய்யப்போகிறீர்கள்?  சிந்தியுங்கள் தமிழ் அன்பர்களே! இல்லை விரைவில் நாம் அடையாளம் இழந்துவிடுவோம்.

அடுத்து சென்னைதமிழ்:  தமிழை வட்டார வழக்கில் பேசுவதில் தவறே இல்லை. அதற்காக அர்த்தமே இல்லாத வார்த்தைகளை சேர்த்துப் பேசுவது ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். தயவுசெய்து முடிந்தவரை நல்ல தமிழில் பேசுங்கள். 

தமிழ் என்ற ஒற்றைச்சொல்லில்  இணைந்து, தரணியெங்கும் தமிழ்ப்புகழ் பாடி, தமிழுக்காக களம் செல்லும் படையணியில் முன்வரிசையில் செல்லத்துடிக்கும் உடன்பிறப்புகளுக்கும், இதுவரை நம் தமிழுக்காக தம் இன்னுயிரையும்  நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கும் இந்தக் கவிதையை சமர்ப்பிக்கிறேன்.

என்தமிழே! உன்னை காப்பேன்

தரணியிலே கால்பதித்தேன்,
தமிழ்மறத்தி பால்குடித்தேன்.
தாய்ப்பாலை கொடுத்தவள்
தமிழ்ப்பாலை அதிகம் கொடுக்க,
உதிரத்தில்கலந்தது தாய்ப்பால்
உயிர்தனில்கலந்ததோ தமிழ்ப்பால்.

திரைகடல்ஓடி திரவியம் தேடிட
தீர்மானித்தேன், புறப்பட்டேன்.
உறவுகள், உடமைகள் பிரிந்தேன்
உலகமெங்கும் சுற்றித்திரிந்தேன்
காணாதவைகளெல்லாம் கண்டேன்...
காணவில்லை தமிழ்போல் எங்கும்.

சென்ற இடமெல்லாம் தமிழின்
சிறப்புகள் கண்டு மகிழ்ந்து, முடிவில்
சென்னை மாநகர் வந்தேன் - அங்கு
அன்னைத்தமிழின் நிலை கண்டேன்
அதிர்ச்சியடைந்தேன், பதறினேன்,
அன்றே  ஓர் சபதம் எடுத்தேன்.

ஆழிக்கடல் அலை எழுந்து
ஆகாயம் தொடுமளவு உயர்ந்து
கொடும்புயல் வேகத்தில் சீறி
குவலயம் நோக்கிப்பாய்ந்து
நீரில் உலகமே அழிந்தாலும் - தமிழை
நீர்புகா பேழையில் காத்திடுவேன்.

வெடித்துச்சிதறி  வின்முட்டி
வெந்தணலாய் கீழ் வீழ்ந்த
எரிமலைக்குழம்பில் பூமி
எரிந்து கருகிப்போனாலும்
கோள்களெங்கும்  தமிழே - உனை
கொண்டு சேர்ப்பேன், காத்திடுவேன்

செங்குருதி முழுதும் இழந்தாலும்
செந்தமிழை காத்திடுவேன்.
எமனருகே வந்து நின்றாலும்
என்னுயிரைத் தரும்படி கேட்டாலும்
இறுதிவரை களம் நிற்பேன்,
என்தமிழே! உன்னை காப்பேன்.

அன்புடன்
பாலா வானுமாமலை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home