கள்ளிமலர்

A tale of a cactus flower..

Friday, August 27, 2010

தமிழ் "மரப்போராளி"


தன் சுய நலனுக்காகவும், தன் இன நலனுக்காகவும் வானுயர்ந்த மரங்களை வெட்டி வீழ்த்துபவர்களுக்கு, மரங்கள் பதில் தாக்குதல்கள் நடத்தினால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை விளக்க முற்பட்டபோது கற்பனையில் உதித்த வரிகள்..இதோ உங்களுக்காக...

தமிழ் மரப்போராளி

தானுயர்ந்து அரசியலில் சிறப்படைய
தன்சாதி கூட்டமொன்றை கூட்டினார்
வானுயர சாலையோரம் வளர்ந்திருந்த
வடிவான மரத்தையெல்லாம் வெட்டினார்

பார் மறந்து பலவருடம் ஆனபோது
பாசாங்காய் மரம் நட்டார் தெருவெங்கும்
ஊரெங்கும் நட்டமரம் வளர்ந்த போது
உள்ளூர தினம்தோறும் அவை  புலம்பியது

தேர்தலிலே தோல்விகண்ட காரணத்தால்
திரும்பவும் ஓர் போராட்டம் செயவேண்டி
பார்தனிலே தான் நட்ட மரத்தையெல்லாம்
பதம்பார்க்க தலைவர் இட்ட ஆணையினால்

தங்கள் கதி என்னவாகும் என்று எண்ணி
தவித்தனவே மரங்களெல்லாம் எப்போதும்
மருதமரம் முடிவாகப் பேசியது - தன்
மனதிலுள்ள திட்டம் ஒன்றை கூறியது

குடும்பத்தோடு கோவில் செல்ல வேண்டி
கும்மிருட்டில் நாளைவரும் தலைவர் வண்டி
வீழ்ந்திடுவேன் தலைவர் வரும் வண்டி மீது
வீழ்ச்சியில்லை இனி உங்களுக்கு எப்போதும்

மருதமரம் சொல்லக்கேட்டு மற்ற மரங்கள்
மனம் கலங்கின,  பிரியாவிடை கொடுத்தன
மரங்களின் தியாகி என கூறி  மருதமரத்தை
மனதாரப் போற்றினர் அனைவரும் புகழ்ந்தனர்

நேரம் போனது தலைவர் வண்டியும் வந்தது
நெடுமென  வளர்ந்த மருதமரம் வீழ்ந்தது
திடுமென வீழ்ந்த மரம் கணப் பொழுதில்
தன்னுயிர்ஈந்து தான் நினைத்ததை முடித்தது.

இடியாய் விழுந்த அடியில் யாவும் முடிந்தது
இரண்டே மாதத்தில் கட்சியும் கலைந்தது
மரங்கள் யாவும் சுதந்திரம் அடைந்தன - மருத
மரத்தை "தமிழ் மரப்போராளி" என அழைத்தன

அன்புடன் 
பாலா வானுமாமலை

Sunday, August 15, 2010

கடவுள் மறுப்பு கழகம்?


அன்பான வாசக நெஞ்சங்களே! நேரத்தை ஒதுக்கி இந்த இணைய தளத்திற்கு வருகை புரிந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று பலர் கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுத்துக் கொண்டு, ஏதோ அவர்கள் தான் பெரியார் அவர்களின் பேரன் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இவர்களையெல்லாம் நீங்களும் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். "இளமறி பயமறியாது" என்பதற்கேற்ப இவர்கள் இன்று தீவிர கடவுள் மறுப்புக் கொள்கையில் முழங்கினாலும், வயதாக வயதாக இவர்கள் எப்படி மாறுவார்கள் என்பதற்கு பல உதாரணங்களை நாம் இதுவரை கண்டு வந்துள்ளோம். அவைகளில் சிலவற்றை இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு கீழே கொடுத்துள்ளேன்.

பெரியாரின் வழிவந்த ...
அண்ணாதுரை அவர்கள் - ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார்
புரட்சிதலைவர் அவர்கள் - மூகாம்பிகையின் தீவிர பக்தர் என்பது உலகறிந்தது.
M .R . ராதா அவர்கள் - கடைசிக் காலத்தில் முருக பக்தரானார்
கருணாநிதி அவர்கள் - மஞ்சள் துண்டு மகேசனானார் (அவர் மனைவியார் அவர்கள் சாய்பாபா என்ற சாமியாரின் காலில் விழுந்து வணங்கிய காட்சியை நாடறியும்)
இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் - சீரடி சாய்பாபா பக்தராகி விட்டார்
பெரியார்தாசன் அவர்கள் - பெயரை அப்துல்லா என மாற்றி  அண்மையில்  இஸ்லாம்  மதத்திற்கு மாறிவிட்டார்.

இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி ஆர்வக் கோளாறில் இன்று எத்தனையோ பேர் தங்களை கடவுள் மறுப்பாளர்கள் என்று சொல்லிக்கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். இவர்களையெல்லாம்  நினைத்து எழுதிய சில கற்பனை வரிகள்...

கடவுள் மறுப்பு கழகம்?

நல்ல நாள் குறித்தார்கள்
நகரில் சிறந்த ஓதுவரை
அழைத்துவந்து, அவர்கையால்
பூசை செய்யச்சொன்னார்கள்

கடவுளை நினைத்து நல்ல
கடப்பாரை கொண்டங்கே
பலத்தை கூட்டி, பாழும்
நிலத்தை தோண்டலானார்

வானம் தோண்டியதில்
வடிவான கட்டிடத்தை
பூமித் தாயை வணங்கி
புவிதன்னில் கட்டினார்

தலைவாசல் நிலைவைக்க
தலைசிறந்த ஓதுவரை
தவமாய் தவம் கிடந்தது
தாங்கி அழைத்து வந்தார்.

வடிவான கட்டிடத்தை
வானுயரக் கட்டினார்கள்
பொலிவான கட்டிடத்தை
பூட்டியே வைத்திருந்தார்

நல்ல நாள் கிடைக்காமல்
நான்குமாதம் சென்றொருநாள்
திறப்புவிழா தேதி தன்னை
தேடிப்பார்த்து குறித்தார்கள்

திறப்பு விழா அழைப்பிதழில்
குங்குமத்தை தடவியவர்கள்
பொறுப்புடனே எடுத்துப்போய்
தலைவரிடம் கொடுத்தார்கள்

படித்துப்பார்த்த  தலைவரும்
பதற்றமின்றி  சொன்னார்
ராகு காலம் முடிந்ததும்
விழாவிற்கு வருவதாக

விழாநாளின் காலையில்
விரைந்திட்டார்  தொண்டர்கள்
தலைவர் வரும் பாதையில்
தவம்கிடந்தார் வெய்யிலிலே

ராகுகாலம் முடிந்த வேளை
ரதம் ஒன்றில் தலைவர் வர
தொண்டர்களின் கோஷமங்கே
தொலைதூரம் கேட்டது பார்.

ரதம் விட்டு இறங்கியவர்
விரைந்திட்டார் கட்டிடத்தை
காத்திருந்த புரோகிதரிடம்
நல்லநேரம் கேட்டறிந்தார்

நல்லநேரம் வரும்வரைக்கும்
நாற்காலியில் அமர்ந்தவர்
நாற்காட்டியில் குறித்திருந்த
ராசிபலன் படிக்கலானார்

காத்திருந்து  நல்ல நேரத்தில்
கட்டிடத்தை திறந்துவைத்தார்
வாழ்த்திய அனைவருக்கும்
வழங்கினார்கள் பிரியாணி.

திறக்கப்பட்ட கட்டிடமோ
திரு திருவென முழித்தது
எழுதி வைத்த தன் பெயரை
எழுத்து கூட்டி படித்தது

பெயர்ப் பலகை சிரித்ததை
பெரிதாய் எண்ணாமல்
படித்தது கட்டிடம். "கடவுள்
மறுப்பு கழகம்" தலைமையகம்.

அன்புடன்
பாலா வானுமாமலை

அரசியல்


மிகப்பெரிய தலைவர்களெல்லாம் பங்குகொண்டு அரசியல் பணியாற்றிய அந்தகால  அரசியலுக்கும் இன்றைய குடும்ப அரசியல் முறைக்கும்  உள்ள  மிகப்பெரிய வித்தியாசத்தை  நாடே அறிந்திருந்தாலும்,  தேர்தல் நேரத்தில் கிடைக்கும் ஒரு சிறு  அன்பளிப்பிற்காக  நாம் நம் வாக்குகளை  விற்று  மீண்டும் மீண்டும் ஒரு கொள்ளையர்  கூட்டத்தை  அரியணையில்  ஏற்றி  அழகுபார்க்கும் இந்த நேரத்தில், இன்றைய அரசியல் எப்பேற்பட்டது  என்பதையும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப் பட்டிருக்கிறோம். 
  
அரசியல்

முரண்பாடுகளின் மொத்த உருவம்
முள்ளமாரிகளின் பள்ளிக்கூடம்
கொள்ளைக்காரர்களின் கூடாரம்
கொலைகாரர்களின் கூட்டுறவுச்சங்கம்

மணல் கொள்ளையரின் மாமன்றம்
அரிசி கடத்துபவருக்கு அடைக்கலம்
கருப்புபண புள்ளிகளுக்கு கடவுள்
சிகப்புவிளக்கு புள்ளிகளுக்கு காவல்

போலிமருந்து வியாபாரியின் பாசறை
போலிமருத்துவர்களுக்கு பாதுகாவல்
போலிச்சான்றிதழ்  செய்வோருக்கு புகலிடம்
போலிச்சாமியாரின் விளம்பர ஊடகம்

தமிழை விற்பவரின் அங்காடிதெரு
பதவியை வாங்குபவரின் சந்தை
பத்திரிக்கைகளின் கொடும் பகைவன்
பாதகர்களின் உயிர்ப் பாதுகாவலன்

தேர்தல் திருவிழாவின் நாயகன்
ஓட்டுக்களை விலைபேசும் வியாபாரி
ஊழல் திமிங்கலத்தின் பெரும்கடல்
உத்தம தலைவர்களுக்கு சுனாமி

மண்பிறந்த தீயோர்கள் கூடுமிடம்
மனசாட்சி இல்லாதோர் மாளிகை
அதிகார வெறியர்களின் அரண்மனை
அத்தனைக்கும் பெயர்தான் அரசியல்.

அன்புடன்
பாலா வானுமாமலை

Friday, August 13, 2010

தாய்ப்பால் கொடுப்பதை தவறாய் நினைத்தாள்


தாய்பால் என்பது தாயுக்கும் குழந்தைக்கும் இடையே நடக்கும் பாசப்பகிர்வு. தாய்ப்பாசம் தளைத்தோங்க தாய் தன் குழந்தைக்குக்  கொடுக்கும் தாய்ப்பால், பிற்காலத்தில் குழந்தை மனதில் தாயின் மீதுள்ள பாசம், உலகில் வேறு எந்தவொரு பொருளின்மீது உள்ளதைவிடவும் பலமடங்கு அதிகரிக்கச்செய்கிறது என்பது அறிவு சார்ந்த சான்றோர் கருத்து. பண்பாடு, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் என நாம் நம்முடைய அடையாளங்களை இழந்து வரும் இன்றைய சூழ்நிலையில் எத்தனை தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்பால் கொடுகிறார்கள் என்றால் அது ஒரு கேள்விக்குறியாகும். தாய்பால் கொடுக்க விரும்பாதவர்கள் பல காரணங்களை சொல்கிறார்கள். அவைகள் யாவும் அவர்களுக்கே வெளிச்சம்.

தாய்ப்பால் கொடுப்பதை தவறாய் நினைத்தாள்

தாய்ப்பால் கொடுப்பதை தவறாய் நினைத்தாள்
தன்னுடல் அழகு குறையுமோ என தவித்தாள்
பசும்பால் கொடுத்தே தன்  பாலகனை வளர்த்தாள்
பாதகத்தியவளும்தான் செய்யும் தவறை மறந்தாள்

வளர்ந்தான் பிள்ளையவன் நாளுமொரு மேனி
வாயோ கொட்டுகின்ற தேன்கூட்டுத் தேனீ
மற்றவர்கள் முகம் அங்கே போனதே கோணி
பெற்றவளோ எதையுமே பொருட்படுத்தா ராணி

இளமைப்பருவத்தில் இணையொன்றை மகன்தேட
இதுநாள் வளர்த்தவளோ உடனடியாய் பெண் தேட
நல்லநாள் பார்த்து அங்கே மணப்பந்தல் அமைத்து
நங்கையாம் ஒருத்தியை மகனும் மணம் முடித்தான்

மனைவி வந்தபிறகு மகன் மாதாவை மறந்தான்
மஞ்சனத்தில் பொழுதெல்லாம் மயங்கியே கிடந்தான்
தனியாக மனைபார்த்து புதுவாழ்க்கை தொடங்கினான்
தாயவளை விட்டவனும் தனியே ஒதுங்கினான்

முதுமை என்னும் பருவம்வந்து முடங்கிவிட்டபோதும்
மூச்செல்லாம் நினைத்திருந்தாள் தாய் மகனை எப்போதும்
தொலைபேசி எடுத்தவளும் தழுதழுத்த குரலில், மகனிடம்
துன்பத்தை எடுத்துரைத்தாள், காண வரும்படி அழைத்தாள்

மகன் சொன்னான், பாலின்றி என்குழந்தை அழுகின்றாள்
பசும்பாலுக்கு பஞ்சம் வந்து விட்டது நினைகின்றேன்
ஊரெங்கும் அலைந்திட்டேன் பாலின்றி திரும்பிவிட்டேன்
ஊர்விட்டு ஊர்போய் பால் வாங்கி வர செல்கின்றேன்

தாய்கேட்டாள், உன்மனைவி பால் கொடுப்பதில்லையோ?
தாய்தடுமாறினாள் கேள்வியை முடிக்கும்முன் - அவள்
பின்னோக்கிச் சிந்தித்தாள், தன் தவறை தான் உணர்ந்தாள்
கண்ணீரைத் துடைத்தாள், கடவுளையே நோக்கி துதித்தாள்

தாய்ப்பாலை பிள்ளைக்கு அன்று தரவில்லை , அது
தவறென்று இன்றுணர்ந்தேன் ஆனாலும் பலனில்லை
ஆண்டவனே உணர்ந்திட்டேன், மன்னியும் - என
அம்மையவள் வணங்கினாள் ஆண்டவனைப் போற்றி

பால்வாங்க சென்றபிள்ளை வரிசையில் காத்திருந்தான்
பால்க்காரன் அருகே வந்து சொன்னான், பாலில்லை!
கன்றுக்கு பால்கொடுத்த காரணத்தால், விற்பதற்கு
இன்றைக்கு பால் இல்லை. நாளை வர சொன்னான்

வேதனையில் வீடுவந்து பார்த்தவன் அதிர்ந்தான்
வேறுஒரு பெண்ணொருத்தி வீட்டினுள் இருக்கக் கண்டு
யாரு என்று இவன் கேட்க, அவள் தயங்கிச் சொன்னாள்
சாலைவழிப் பாதையிலே வேளை செய்யும் கூலியென்று.

கேட்டேன் பிஞ்சுக்குழந்தையின் அழுகுரலை, மனம்
கேட்கவில்லை அதனால் வந்தேன் உள்ளே, வந்ததும்
அறிந்தேன் பாலின்றி குழந்தை துடிப்பதை - அதற்கு
அளித்தேன் என்பாலை ஒரு தாயாய் என்றால் அவள்.

நன்றிசொன்ன அவன் மனது நடுங்கியது, விடைபெற்று
சென்றவளை வாழ்த்தினான். வாசலிலே நிழல் கண்டான்
அன்னையவள் வாசலிலே நிற்கக் கண்டான் - அருகில்
தன்மனைவி, தலைகுனிந்து கண்கலங்கி கதறக் கண்டான்

பாலூட்டி வளர்த்தமகன் என்று பாவிநான் சொல்வேனோ!
பசும்பாலை கொடுத்தன்றோ பாவிநான் வளர்த்தேன் உனை
மாதா நான்செய்த பெரும்தவறை யாரும் செய்ய அனுமதியேன்
மகனே உன் மனைவியிடம்  தாய்ப்பாலின் பெருமைசொன்னேன்

தாயவளும் சொன்னபோது, தனயன் மனம் கலங்கியது
தான் செய்ததவறை எண்ணி வருந்தியே மகன் சொன்னான்
தாய்ப்பால் தராத காரணத்தால் தாயை உதறிய குழந்தை
தரணியில் வாழ்ந்தான் என அவப்பெயர் வேண்டாம் எனக்கு.

தாயே என்னை மன்னியுங்கள் என வேண்டியே மகன் கெஞ்ச
தாயோ, மகன்பெற்ற மகளையெடுத்து கண்கலங்கி கொஞ்ச
மனம் திருந்தி மருமகளும் மகளை கையில் எடுத்தாள் - தன்
மனதார குழந்தைக்கு அன்றுமுதல் தாய்ப்பால் கொடுத்தாள்

அன்புடன் பாலா வானுமாமலை

Tuesday, August 3, 2010

ஒழிப்போம் குழந்தை தொளிலாலர்முறையை இன்றே!


வறுமையின் காரணாமாக சில பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிசெல்லும் பருவத்திலேயே கடுமையான வேலைக்கு அனுப்புகிறார்கள். அந்த பிஞ்சுக் குழந்தைகள் மூலம் இன்று ஒரு சிறு வருமானம் கிடைப்பது இனிமையாக இருந்தாலும், சற்று நினைத்துப் பாருங்கள் அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை? நாளைய சரித்திரத்தை மாற்றி எழுதப் பிறந்த மிகப்பெரிய ஆற்றல் மிக்க தலைவனாகவோ, பல அறிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வந்த அறிவியல் விஞ்ஞானியாகவோ, பெரிய கவிஞராகவோ, வல்லுனராகவோ, ஆசிரியராகவோ, சொல்லிக்கொண்டே போகலாம்...இப்படி ஏதோ ஒரு சிறப்புக்குச் சொந்தக்காரகள் இன்றைய குழந்தைகள். அவர்களின் அறிவுக்கண்ணை அடைத்து, பொருள் ஈட்ட வேண்டி வேலைக்கு அனுப்புவது நியாயமா? சிந்தித்து பாருங்கள் பெற்றவர்களே!

ஒழிப்போம் குழந்தை தொளிலாலர்முறையை இன்றே!

இருள் நீக்க வேண்டி நல்ல கல்வியை கற்க
இனிதே தினம் பள்ளிசெல்லும் குழந்தைகளை
பொருள் ஈட்ட வேண்டி நீங்கள் முடிவெடுத்து
பொறுப்பற்று அனுப்பலாமா வேலைகள் செய்ய?

அறிஞராய், தலைவராய், அறிவியல்மேதையாய்
அடக்குமுறைதனை உடைக்கும் போராளியாய்
வளர்ந்திடும் குழந்தைகள் நல் வழிதனை மறித்து
வற்புறுத்தல் ஆகுமா பொருள் ஈட்ட பணித்து?

புத்தகத்தின் பாரத்தை சிரமப்பட்டே, பிள்ளை
தினம்தோறும் பள்ளிக்கு எடுத்துச் செல்ல
குடும்பத்தின் பாரத்தை தூக்கச் சொல்லி - நீங்கள்
குழந்தையிடம் முறையிட்டால்  அது சரியோ?

எதிர்கால சரித்திரத்தை மாற்றி எழுதிடும்
ஏற்றமிகு தலைவனாக பிறந்த பிள்ளையை
நிகழ்கால வறுமைதன்னை நினைத்தே நீவிர்
தொழில் செய்து பொருள் ஈட்ட அனுப்பலாமோ?

பெற்றவர்கள் உங்கள் துன்பத்தை போக்க, ஆளும்
கொற்றவனும் நினைத்திடான், ஆனாலும் நீங்கள்
பெற்றபிள்ளை போக்கிடுமே, புகழ் உச்சியில்-உமை
ஏற்றிவைத்து போற்றிடுமே!  பெருமை சேர்த்திடுமே!

மறவாதீர் பெற்றோரே மறவாதீர் என்றென்றும்
குழந்தை தொளிலாலர்முறை ஓர் இழிமுறை.
அனுப்புவோம் குழந்தைகளை பள்ளிக்கு நன்றே
ஒழிபோம் குழந்தைதொளிலாளர் முறையை இன்றே!

அன்புடன் பாலா வானுமாமலை