தாய்ப்பால் கொடுப்பதை தவறாய் நினைத்தாள்
தாய்பால் என்பது தாயுக்கும் குழந்தைக்கும் இடையே நடக்கும் பாசப்பகிர்வு. தாய்ப்பாசம் தளைத்தோங்க தாய் தன் குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பால், பிற்காலத்தில் குழந்தை மனதில் தாயின் மீதுள்ள பாசம், உலகில் வேறு எந்தவொரு பொருளின்மீது உள்ளதைவிடவும் பலமடங்கு அதிகரிக்கச்செய்கிறது என்பது அறிவு சார்ந்த சான்றோர் கருத்து. பண்பாடு, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் என நாம் நம்முடைய அடையாளங்களை இழந்து வரும் இன்றைய சூழ்நிலையில் எத்தனை தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்பால் கொடுகிறார்கள் என்றால் அது ஒரு கேள்விக்குறியாகும். தாய்பால் கொடுக்க விரும்பாதவர்கள் பல காரணங்களை சொல்கிறார்கள். அவைகள் யாவும் அவர்களுக்கே வெளிச்சம்.
தாய்ப்பால் கொடுப்பதை தவறாய் நினைத்தாள்
தாய்ப்பால் கொடுப்பதை தவறாய் நினைத்தாள்
தன்னுடல் அழகு குறையுமோ என தவித்தாள்
பசும்பால் கொடுத்தே தன் பாலகனை வளர்த்தாள்
பாதகத்தியவளும்தான் செய்யும் தவறை மறந்தாள்
வளர்ந்தான் பிள்ளையவன் நாளுமொரு மேனி
வாயோ கொட்டுகின்ற தேன்கூட்டுத் தேனீ
மற்றவர்கள் முகம் அங்கே போனதே கோணி
பெற்றவளோ எதையுமே பொருட்படுத்தா ராணி
இளமைப்பருவத்தில் இணையொன்றை மகன்தேட
இதுநாள் வளர்த்தவளோ உடனடியாய் பெண் தேட
நல்லநாள் பார்த்து அங்கே மணப்பந்தல் அமைத்து
நங்கையாம் ஒருத்தியை மகனும் மணம் முடித்தான்
மனைவி வந்தபிறகு மகன் மாதாவை மறந்தான்
மஞ்சனத்தில் பொழுதெல்லாம் மயங்கியே கிடந்தான்
தனியாக மனைபார்த்து புதுவாழ்க்கை தொடங்கினான்
தாயவளை விட்டவனும் தனியே ஒதுங்கினான்
முதுமை என்னும் பருவம்வந்து முடங்கிவிட்டபோதும்
மூச்செல்லாம் நினைத்திருந்தாள் தாய் மகனை எப்போதும்
தொலைபேசி எடுத்தவளும் தழுதழுத்த குரலில், மகனிடம்
துன்பத்தை எடுத்துரைத்தாள், காண வரும்படி அழைத்தாள்
மகன் சொன்னான், பாலின்றி என்குழந்தை அழுகின்றாள்
பசும்பாலுக்கு பஞ்சம் வந்து விட்டது நினைகின்றேன்
ஊரெங்கும் அலைந்திட்டேன் பாலின்றி திரும்பிவிட்டேன்
ஊர்விட்டு ஊர்போய் பால் வாங்கி வர செல்கின்றேன்
தாய்கேட்டாள், உன்மனைவி பால் கொடுப்பதில்லையோ?
தாய்தடுமாறினாள் கேள்வியை முடிக்கும்முன் - அவள்
பின்னோக்கிச் சிந்தித்தாள், தன் தவறை தான் உணர்ந்தாள்
கண்ணீரைத் துடைத்தாள், கடவுளையே நோக்கி துதித்தாள்
தாய்ப்பாலை பிள்ளைக்கு அன்று தரவில்லை , அது
தவறென்று இன்றுணர்ந்தேன் ஆனாலும் பலனில்லை
ஆண்டவனே உணர்ந்திட்டேன், மன்னியும் - என
அம்மையவள் வணங்கினாள் ஆண்டவனைப் போற்றி
பால்வாங்க சென்றபிள்ளை வரிசையில் காத்திருந்தான்
பால்க்காரன் அருகே வந்து சொன்னான், பாலில்லை!
கன்றுக்கு பால்கொடுத்த காரணத்தால், விற்பதற்கு
இன்றைக்கு பால் இல்லை. நாளை வர சொன்னான்
வேதனையில் வீடுவந்து பார்த்தவன் அதிர்ந்தான்
வேறுஒரு பெண்ணொருத்தி வீட்டினுள் இருக்கக் கண்டு
யாரு என்று இவன் கேட்க, அவள் தயங்கிச் சொன்னாள்
சாலைவழிப் பாதையிலே வேளை செய்யும் கூலியென்று.
கேட்டேன் பிஞ்சுக்குழந்தையின் அழுகுரலை, மனம்
கேட்கவில்லை அதனால் வந்தேன் உள்ளே, வந்ததும்
அறிந்தேன் பாலின்றி குழந்தை துடிப்பதை - அதற்கு
அளித்தேன் என்பாலை ஒரு தாயாய் என்றால் அவள்.
நன்றிசொன்ன அவன் மனது நடுங்கியது, விடைபெற்று
சென்றவளை வாழ்த்தினான். வாசலிலே நிழல் கண்டான்
அன்னையவள் வாசலிலே நிற்கக் கண்டான் - அருகில்
தன்மனைவி, தலைகுனிந்து கண்கலங்கி கதறக் கண்டான்
பாலூட்டி வளர்த்தமகன் என்று பாவிநான் சொல்வேனோ!
பசும்பாலை கொடுத்தன்றோ பாவிநான் வளர்த்தேன் உனை
மாதா நான்செய்த பெரும்தவறை யாரும் செய்ய அனுமதியேன்
மகனே உன் மனைவியிடம் தாய்ப்பாலின் பெருமைசொன்னேன்
தாயவளும் சொன்னபோது, தனயன் மனம் கலங்கியது
தான் செய்ததவறை எண்ணி வருந்தியே மகன் சொன்னான்
தாய்ப்பால் தராத காரணத்தால் தாயை உதறிய குழந்தை
தரணியில் வாழ்ந்தான் என அவப்பெயர் வேண்டாம் எனக்கு.
தாயே என்னை மன்னியுங்கள் என வேண்டியே மகன் கெஞ்ச
தாயோ, மகன்பெற்ற மகளையெடுத்து கண்கலங்கி கொஞ்ச
மனம் திருந்தி மருமகளும் மகளை கையில் எடுத்தாள் - தன்
மனதார குழந்தைக்கு அன்றுமுதல் தாய்ப்பால் கொடுத்தாள்
அன்புடன் பாலா வானுமாமலை


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home