கள்ளிமலர்

A tale of a cactus flower..

Sunday, June 13, 2010

என் தம்பி சிங்கமே! வெல்க உன் லட்சியம்.



குடும்பச் சூழ்நிலையின் காரணமாக இளம் வயதிலேயே மிகபெரிய சுமைகளைத் தாங்கி, பொருள் ஈட்டும் பொருட்டு அதே சமயத்தில் தீய வழியில் செல்லாமல் உழைக்க வேண்டி வளைகுடா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லும் தம்பிமார்களுக்கு, நான் கடந்து  வந்த  பாதைகளிலிருந்து சிலவற்றை நினைவுகூர்ந்து எழுதுவதாவது ....

என் தம்பி சிங்கமே! வெல்க உன் லட்சியம்.

மலை அளவு கவலைகள் மனம் முழுதும் நிறைந்திருக்க
தலை வாசல் கடக்கும்போல் விழிகளில் நீர் நிறைந்திருக்க
விலை மதிப்பு இல்லாத இளம் பருவம் வழி மறித்திருக்க
அலை அலையாய் மனக்கண்ணில் எதிர்காலம் தெரிந்திருக்க
நிலை கொள்ளா மனதோடு வெளிநாடு செல்லும் எந்தன்
இளையோனே! என் தம்பி சிங்கமே! வெல்க உன் லட்சியம்.

வாட்டும் குடும்பச் சூழ்நிலை, வாடியது உந்தன் மனநிலை
வீட்டைப் பிரிந்து இளமையில், வெளிநாடு செல்ல நினைத்து,
சேட்டைகள் செய்யும் இளம்பருவம் உதறித்தள்ளி, பிறந்த
கூட்டைப்பிரிந்த குருவியாய் பறந்து, நம்நாட்டை பிரியும்  உனை
போட்டிகள் நிறைந்த உலகம் வரவேற்கும், புதிர் போட்டுச்சிரிக்கும்
ஏட்டினில் இதுவரை படித்திடாத, பாடத்தை கற்றுத்தரும்

உழைத்திட போகும் உன்னை  சிறப்புகள் சேராவண்ணம், குழி
பறித்திட முயலும் கூட்டம் வலை விரித்துக் காத்திருக்கும். கவனம்.
வாய்ப்புகள் உனக்கு கிடைத்திடுமோ என்றெண்ணி சில வீணர்கள்
வாய்ப்புகழ் முன் பேசி, சதி வலையொன்று பின் விரிப்பார்.கவனம்.
ஏய்ப்போர்கள், எத்தர்கள் விரித்திட்ட சதி வலையை அறுத்திடு - நீ
எப்போதும் தெளிவுடன் இலட்சியப் பயணத்தை தொடர்ந்திடு

போட்டியில் உன்னை வெல்ல முடியாத புல்லர்கள் என்றும்
போட்டுக்கொடுத்து மாட்டிவிட நினைப்பார். கலங்கிவிடாதே!
காட்டு நரிகளை மிஞ்சும், சில குறுகிய மனமுடையோர் - வெளி
நாட்டிலும் வாழ்வார், நாடகம் செய்வார். மறந்துவிடாதே!
வாட்டும் கவலைகள் மறந்து, வாலாட்டும் தடைகளை தகர்த்து.
வீட்டின் நிலைமையை நினைத்து, விழிப்புடன் பணியாற்று.

கடின உழைப்பும், விடா முயற்சியும் நிரம்பிய நெஞ்சமும்
படித்த படிப்பும், பகுத்தறியும் திறனும் மின்னிடும் கண்களும்
பெற்றவர் கொடுத்த பெரும் சொத்து என்றே என்னாடா - நீ
மற்றவர் செய்யும் மதிகெட்ட செயலை ஒதுக்கித் தள்ளடா
அன்னைத்தமிழ் கற்றுத்தந்த நேர்மைதனை என்றும் போற்றடா -நீ
மண்ணில் வெற்றிக்கொடிதன்னை, விண்ணைத்தொட  நாட்டடா.

என்றும் உன்னை வாழ்த்தும் அண்ணன்
பாலா வானுமாமலை

Monday, June 7, 2010

ஒரு போர்களத்தின் புலம்பல்

ஒரு போர்களத்தின் புலம்பல்

முரசுகள் ஒலிக்கக்கண்டேன்
மூர்க்கமிகு போர்கள் கண்டேன்
சிரசுகள் உருளக்கண்டேன்
செங்குருதி ஓடக்கண்டேன்
சிங்கமென சீறியே பாய்ந்த
வீரர்கள் கூட்டம் கண்டேன்- அவர்
அங்கங்கள்  எந்தன் மடியில்
தெறித்து விழ நானும் கண்டேன்

கரிப்படைகள் மோதக்கண்டேன்
பரிப்படைகள் பாயக்கண்டேன்
வெறிகொண்ட வேங்கை போலே
வீரர் கூட்டம் போரிடக்கண்டேன்
விழுப்புண்கள் வாங்கிய வீரர்
விழிதன்னில் மகிழ்ச்சி கண்டேன்
மதிப்பெண்கள் அதிகம் பெற்ற
மாணவன் போல் துள்ளக்கண்டேன்

தோற்றவரின் வீரம் தன்னை
வென்றவர்கள் போற்றக்கண்டேன்
வீரர் மனம் புண்படாமல்
தோரணையாய் நடத்தக்கண்டேன்
போர்கள் பல என்மேல் கண்டேன்
போர்க்குற்றம் வெகுசில கண்டேன்
ஈழத்துப்போர் போல் கொடுமை
இதுவரைக்கும் கண்டதில்லை நான்

தமிழ் ஈழம் என்றோர் தேசம்
தரணியிலே மலர வேண்டி
கரும்புலிகள் சீற்றம் கண்டேன் - அவர்
கண்களில் ஓர் வேட்கை கண்டேன்
புலிப்படையின் முன்னே இலங்கை
கிலி கொண்டு ஓடக்கண்டேன்
பார் என்றும் கண்டிராத பெரும்
போர்கண்டேன் இலங்கையில் நான்

வெற்றி என்னும் கனி பறிக்க
விரைந்திட்ட புலிகள் கண்டேன்
சுற்றி நின்று நாடுகள் பல 
சூழ்சிகள் செய்யக் கண்டேன்
நேரில் நின்று புலிகளோடு
போரில் வெல்ல முடியாதென்று
பாரெங்கும் போய் இலங்கை
படை உதவி கேட்கக்கண்டேன்

சத்தியத்தை காக்கும் புலிகள்
சரித்திரத்தை அறிந்தவர்கள்
யுத்த உதவி கேட்டு வந்த
இலங்கையிடம் மறுத்துவிட
விரக்தி கொண்ட இலங்கையது
வேறுவழி நோக்கக்கண்டேன்
மெல்ல இலங்கை வலையில்-பல
வல்லரசுகள் வீழக் கண்டேன்

தொலை நோக்கு பார்வையில்லா
சில நாட்டு தலைமை எடுத்த
பிழையான முடிவுகளால் - பெரும்
அழிவொன்று நானும் கண்டேன்
கொடும்படைகள் துணை கொண்டு
கொடுங்கோல் இலங்கையரசு
தமிழினத்தை அழிக்கக் கண்டேன்
தரணியெங்கும் எதிர்ப்பு கண்டேன்

உலகநாட்டு எதிர்ப்புகளை
உலையில் போட்டு மூடிவைத்து
ஈழத்து தமிழர் மீது, இலங்கை
இன அழிப்பு செய்யக் கண்டேன்
குழந்தைகளை, பெரியவரை
கொலைசெய்து புதைக்கக்கண்டேன்
கர்ப்பிணியின் வயிர் கிழித்து
சிசுவைக் கொன்று வீசக் கண்டேன்

ஊனமுற்ற மக்களை எல்லாம்
ஓரிடத்தில் அடைத்து வைத்து
ஈனமற்ற இலங்கை தேசம்
இன்பமுற நானும் கண்டேன்
கொடுத்து வாழ்ந்த தமிழினம்
கையேந்தும் நிலை கண்டேன்
உணவு, மருந்து இல்லாமலே
உயிர்கள் பிரிந்த காட்சி கண்டேன்

முறம் எடுத்து புலிவிரட்டிய
புறநானூற்று தமிழ் மறத்திகள்
வீர மரணம் அடைந்த பின்னும்
விட்டுச்சென்ற உடலைக்கூட
கேவலமாய் நடந்து கொண்ட
கேடுகெட்ட இலங்கை ராணுவம்
தலைக்கணம் முற்றிப்போய்
தாண்டவம் ஆடக் கண்டேன்

தமிழர்களை பிடித்துப்போன
தறிகெட்ட இலங்கை அரசு
கை கால்கள் கட்டி வைத்து
சுட்டுக் கொல்லும் காட்சிகளில்
இனவெறியின் உச்சம் கண்டேன்
மனம் கலங்கி நானும் நின்றேன்
போர் என்று பேர் வைத்து - ஓர்
இனஅழிப்பு நடக்கக் கண்டேன்

தமிழருகோர் தேசம் வேண்டி
தன்னுயிரை இழந்த வீரர்
துயிலுகின்ற வீட்டை இலங்கை
துவசம்செய்து அழிக்கக்கண்டேன்
உடனிருந்தே துரோகம்செய்த
கருணாக்கள் இருவர் கண்டேன்
உலகத்து தமிழர் நெஞ்சம்
உணர்ச்சியால்  துடிக்கக்கண்டேன்

தமிழீழம் மலர்ந்திட வேண்டி
தணல் மீதோர் சபதம்செய்து
இனைப்படுகொலை  செய்திட்ட
இழியோர்கள் வாழுகின்ற
இலங்கையெனும் தேசத்தை
இல்லாது ஒழித்திட வேண்டி
தமிழ் தேசியத்தலைவர் போலே
காண்பேனோ இனிஒரு வீரன்?

இப்படிக்கு ஈழத்துப்போர்க்களம்