கள்ளிமலர்

A tale of a cactus flower..

Saturday, September 25, 2010

விதவைக்கு வாழ்வு நல்க, விரும்பினான் ஓர் இளைஞன்...

ஒரு விதவைப்பெண்ணுக்கு வாழ்வுதர விரும்பும் நல்ல மனம் கொண்ட  இளைஞனையும், ஒரு விதவைப் பெண்ணா எனக்கு மருமகளாய்  வரப்போகிறாள் என வரட்டு கௌரவத்தில் மகனின்  நல்லெண்ணத்தை  எதிர்க்கும் தாயையும்  சந்தித்து வந்ததிலிருந்து மனதில் பல கற்பனைகள் உதித்த வண்ணம் உள்ளது. அவைகளில் சிலவற்றை எழுத்தில் உங்களுக்காக கொடுத்துள்ளேன்...  

விதவைக்கு வாழ்வு நல்க
விரும்பினான் ஓர் இளைஞன்
விரைந்திட்டான் அன்னையிடம்
விருப்பத்தை எடுத்துரைத்தான்

வெறுப்புடனே அன்னையவள்
மறுத்திட்டாள் மகன் கூற்றை
விதவைப்பெண் மருமகள் நம்
வீட்டிற்கு வேண்டாமென்றாள்

மாதங்கள் சில போனபின்பு
மகன் சொன்னான் தாயிடம்  
மாற்றுதிறன் உடையவளை
மணமுடிக்க விரும்புகிறேன்.

மனம்கொதித்தாள் தாயவளும்
மறுத்திட்டாள் மகன் கூற்றை
மாற்றுதிறன் உடைய பெண்
மருமகளாய் வேண்டாமென்றாள்.

உடனடியாய் புறப்பட்டாள்
ஊர் ஊராய் பெண் பார்க்க.
இறுதியிலே ஒரு பெண்ணை
உறுதி செய்தாள் மகனுக்கு

கல்லூரி படிக்கும்போது
கற்புதனை இழந்தவள் என 
ஊரார்கள் சொன்னபோதும் 
உதாசீனம் செய்தாள் அன்னை 

ஒருகண்ணின் பார்வையது  
சுத்தமாய் தெரியாதென
பெண்வீட்டார் சொன்னபோதும்
பெரிது படுத்தவில்லை அவள்

வரதட்சணை என்ற "பெரிய" 
பரிகாரம் கிடைத்ததினால்
வாயடைத்து போனாள் அன்னை
நிச்சயித்தால் அப்பெண்ணை

மணம் முடிந்த மறுவருடம்
மகன் விபத்தில் இறந்திட்டான்
மருமகளோ தன் வயிற்றில்
மகவு ஒன்றை சுமந்திட்டாள்

சிலநாளில் மருமகளும்  
பிறந்தவீடு சென்றுவிட்டாள்
பத்துமாதம் சென்று ஒருநாள் 
பாலகனை பெற்றெடுத்தாள்

மகன்பெற்ற மாணிக்கத்தை
காணவேண்டி அன்னையவள்
மருமகளின் இருப்பிடத்தை
உடனடியாய் சென்றடைந்தாள்

தொட்டிலிலே கிடந்தவனை 
தூக்கி எடுக்க குனிந்தவளை
தடுத்திட்டாள் மருமகள்
அதிர்ச்சி கொண்டாள் அத்தை 

விதவை ஒருத்தி தன்மகனை 
முதலில் எடுத்து கொஞ்சிடவே 
தான் விரும்பவில்லை என்றாள்
தன்னிலை தான் மறந்தாள் 

மருமகளின்  வார்த்தைகேட்டு 
மனம் நொந்தாள் அத்தையவள் 
கவலையிலே உடல் இளைத்தாள்
படுக்கையிலே தான் விழுந்தாள்

நோய் முற்றி தான் இருக்கும்
செய்திதனை அறிந்த போதும்    
மருமகள் வந்து தன்னை  
காணாததால் கலங்கிப்போனாள்

பால்காரன் வந்தொருநாள்
படபடப்பாய் சொன்னான்
"உங்கள் மருமகள் நேற்று
மறுமணம் செய்து கொண்டாள்"

நொறுங்கி விட்டாள் அன்னை
நோய் முற்றியது இன்னும்.
ஊரார்கள் அவளை சேர்த்தனர்
அரசு மருத்துவமனையில்.

படுக்கையிலே கிடந்தவளை
பார்க்க யாரும் வரவில்லை
செவிலிப் பெண் ஒருத்திமட்டும்
சிறப்பாக கவனித்தாள்

அன்னையின்  உடல்நிலையில்
முன்னைவிட முன்னேற்றம் 
செவிலிப்பெண் கவனிப்பில்
சிலிர்த்தாள்  அன்னையவள்

செவிலியை நோக்கி அன்னை
கை எடுத்தாள், நா தழுத்தாள்
கண்ணீரை துடைத்தவள் 
கதை முழுதும் சொன்னாளே 

பொறுமையாய் கதைகேட்ட
செவிலிப்பெண் சொன்னாள்
அன்னையே  உங்களை 
நான் அறிவேன் நன்றாக

அன்று உங்கள் மகனுக்கு
மனைவியாக வேண்டாமென்று
நீங்கள் மறுத்த  விதவைப்பெண்
நானே தான் எனச்சொன்னாள்

அன்னையவள் அதிர்ச்சியுற்றாள்
கண்ணீரை சிதற விட்டாள்
முன்னிருந்த செவிலியிடம்
மன்னிப்பு வேண்டி  நின்றாள் 

அன்னையிடம் செவிலியவள்
அன்புடனே உரைக்கலானாள்
இதுவரை நான் அனாதையம்மா
இன்று உங்கள் பிள்ளையம்மா

தாய்போல காத்திடுவேன்
தயவுசெய்து வாருங்கள்.
அன்னையை அழைத்து போய் 
அன்புடனே பார்க்கலானாள் .

அன்புடன் பாலா வானுமாமலை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home