என்று காண்பேன் இனி?
வாழ்கையின் பல பரிமாணங்களை கண்ட பின்னும், இன்ப துன்பங்களின் எல்லைகளை தொட்ட பின்னும், மனதின் ஒரு ஓரத்தில் இன்னும் அந்த சிறு வயதின் ஆனந்த காட்சிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.. அவைகளில் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
என்று காண்பேன் இனி?
கொல்லம் ஓடு போட்ட வீடு
குளக்கரையில் அமைந்த வீடு
நல்லதொரு நாள்தனிலே
நான் வந்து பிறந்த வீடு
என்று காண்பேன் உனை - நான்
என்று காண்பேன் இனி?
வட்ட கல் வெட்டான் குழி
வழுக்கி நான் விழுந்த குழி
விட்டு என்றும் பிரியாத
வெங்காயத் தாமரையே!
என்று காண்பேன் உனை - நான்
என்று காண்பேன் இனி?
ஓங்கி உயர்ந்த பனை
ஓலை முடி கொண்ட பனை
ஊரணியின் ஓரத்தில்
ஓரணியாய் நின்ற பனை
என்று காண்பேன் உனை - நான்
என்று காண்பேன் இனி?
நீச்சல் படித்த குளம்
நீர்க்கோழி பிடித்த குளம்
கோடை விடுமுறையில்
ஓடி விளையாண்ட குளம்
என்று காண்பேன் உனை - நான்
என்று காண்பேன் இனி?
கல்லில் வடித்த சிலை
காதுடைந்த நாய் சிலை
குளக்கரை சாஸ்தாவின்
குதிரையாய் நின்ற சிலை
என்று காண்பேன் உனை - நான்
என்று காண்பேன் இனி?
வேட்டைக்கு போன காடு
வெள்ளை முயல் பிடித்த காடு
பலநாள் நான் திரிந்த
தளவாய் தேவர் காடு
என்று காண்பேன் உனை - நான்
என்று காண்பேன் இனி?
அரசு துவக்கப்பள்ளி
ஆத்திச்சூடி படித்த பள்ளி
அன்னைத்தமிழ் மொழியை
ஆர்வமாய் கற்ற பள்ளி
என்று காண்பேன் உனை - நான்
என்று காண்பேன் இனி?
மனம் நிறைய நினைவலைகள்
மலரும் நல் நினைவுகள்
தினம் எழுதி தீர்த்தாலும்
தீர்ந்திடுமோ ஆதங்கம்?
எண்ணமெல்லாம் நிறைந்தவற்றை
என்று காண்பேன் இனி?
அன்புடன்
பாலா வானுமாமலை


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home