உயிரோடு உயிர் தந்தாள்
அன்னையும் பிதாவும் முன்நெறி தெய்வம் என்ற அவ்வையார் அவர்களின் வாக்குப்படி பெற்ற தாய் தந்தையரை பேணிக்காக்கும் பிள்ளைகளை மனதார வாழ்த்துகிறேன்.
அதே சமயம் மிகவும் கஷ்ட்டப்பட்டு வளர்த்த தாய் தந்தையரை முதியோர் இல்லத்திலோ அல்லது அநாதையாகவோ விட்டு விட்டு கோவில் கோவிலாக கும்பிடப்போகும் சுயநலவாதிகளுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் உங்கள் தாய் தந்தையருக்கு இன்று செய்வது போல் நாளை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகள் செய்வார்கள் என்பது நிச்சயம்.
உயிரோடு உயிர் தந்தாள்
உயிரோடு உயிர் தந்தாள், மணி
வயிறோடு உனை சுமந்தாள்
ஈரைந்து மாதங்கள் தவமியற்றி
இறைவனை நித்தமும் வேண்டி
மரணத்தை தொடும் நிலையில்
மண்ணில் உன்னை ஈன்றாள்
மரணவலி மறந்தாள், பிறந்த
மகன் உனை கண்டுமகிழ்ந்தாள்
உறக்கம் பலநாள் தொலைத்தாள்
உணவையும் அவள் மறந்தாள்
உள்ளங்கையில் உன்னை வைத்து
உதிரத்தை பாலாக்கித் தந்தாள்
சீரோடும் சிறப்போடும் உன்னை
மார்போடு சுமந்தாள், வளர்த்தாள்
சீராக தமிழ் அமுதை தினமும்
செல்வமகன் உனக்குத் தந்தாள்
பேச்சு கற்றுத்தந்தாள் உனக்கு
பிள்ளைதமிழ் சொல்லித்தந்தாள்
பெற்றமகன் மழலை மொழியில்
மற்றதெல்லாம் மறந்துநின்றாள்
கண்மணியாம் மகன்மேல் ஊரார்
கண்பட்டுவிடுமோ என்றெண்ணி
கலங்கினாள், அஞ்சினாள்- உனை
கவனமாக காத்து வந்தாள்
நடக்கச் சொல்லித் தந்தாள், நீ
நடைபழகி விழும்போது, உனை
ஓடிவந்து எடுத்தாள், துடித்தாள்
மடியிலிட்டு தடவிக்கொடுத்தாள்
பாலர்பள்ளி செல்லும் பருவமதை
பாசமகன் தொட்டானென்று
தாயவளும் மகிழ்ச்சிகொண்டாள்
தனயன் உனை அழைத்துச்சென்றாள்
கணம் கொண்ட புத்தக பை, தன்
கண்மணிக்கு வலிக்குமென்று
பெற்றவள் அவள் நினைத்ததினால்
நித்தமும் பை சுமந்திட்டாள்
பாலர்பள்ளி வாசலிலே, தன்
பாலகன் உனை வழியனுப்பி
கையசைத்தாள், கலங்கினாள்
கனவுகள் பல கண்டாள் அவள்
பள்ளிக்கூடம் படித்து வந்த
பிள்ளை நீயும் சொல்லக்கேட்டு
ஆனந்தம் அடைந்திட்டாள்
ஆண்டவனை துதித்திட்டாள்
விளையாட போன உன்னை
வினாடிஎல்லாம் தேடிட்டாள்
வீட்டுக்கு நீ வந்தவுடன்
விளையாட்டாய் கண்டித்தாள்
நாட்கள் பல கடந்து செல்ல, உன்
நடவடிக்கைகள் மாற்றம்கொள்ள
கல்லூரி முடிக்கும் முன்னே, தாயை
கண்ணீரில் கலங்க விட்டாய்
அமிர்தமென இதுவரைக்கும், நீ
ஆர்வமாய் விரும்பி சாப்பிட்ட
அன்னையவள் சமயல்தனை
அலட்சியமாய் பார்க்கலானாய்
சிறு உதவி செய்வதற்கும்
மறுத்து விட்டாய், தாய்மேல்
சினம் கொண்டாய், சீறினாய்
சிறு சிறு செயலிலும் வெறுத்தாய்
கலங்கிய கடல் போல தாய்
மனம் கலங்கிடச் செய்தாய்
கவலையே இல்லாமல் ஊர்
சுற்றினாய், ஊதாரியானாய்
அன்னையவள் பதறிவிட்டாள்
அச்சம்கொண்டாள் மகனைஎண்ணி
முன்னைவிட கடுமையாக
முறையிட்டாள் இறைவனிடம்
அன்ன ஆகாரம் மறந்திட்டாள்
ஆண்டவனை வேண்டி நின்றாள்
அனையவள் மிகவும் தவித்தாள்
அன்புமகன் உனையே நினைத்தாள்
பெண்ணொருத்தி புதிதாக
உன்வாழ்வில் நுழைந்து விட
மதி மறந்து போனாயே, பெற்ற
மாதாவை நீ மறந்தாயே
உலகமாய் இதுவரைக்கும்
உன்கண்ணில் தெரிந்த தாய்
எதிரியாய் உன் கண்ணில்
இபொழுது தெரிந்திட்டாள்.
கண்ணுக்குள் உனை வைத்தால்
கண்மூட வலிக்கும் என்று
இதயத்தில் உன்னை வைத்து
இன்று வரை வளர்த்தவளை, உன்
இதயத்தில் ஒருத்தி வந்தவேளை
இரக்கமின்றி புறக்கணித்தாய்
இம்சித்தாய், முடிவாய் முதியோர்
இல்லத்தில் விட்டாயே, சரியா?
அன்புடன் பாலா வானுமாமலை


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home